Tuesday, February 13, 2007

மனிதர்கள் - 1

மரணத்தின் வாடை அடிக்கும் மதுரை தத்தனேரி மயானம்.
குள்ளமான உருவமாய் அழுக்குப் படிந்த ஆடைகளுடன் ஓடியாடி சடலம் எரித்துக் கொண்டிருக்கிறார், வெட்டியான் ஹரி (51). ஆனால் அவரைப் பற்றி அறிய அறிய, நமக்குள் விஸ்வரூபம் எடுக்கிறார்.
இந்த சுடலை பூமி மனிதர் ஆற்றிவரும் சமூக சேவைகளின் பட்டியல் மிக நீளமானது. ஆண்டுதோறும் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், நலிவடைந்த மக்களுக்கென மதுரை மாநகராட்சி மருத்துவமனைக்கு இலவசக் கட்டில்கள், படுக்கைகள், மழை, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களின்போது பாதிக்கப்பட்டோருக்கு ஓடோடிச் சென்று உணவு வழங்குவது, ஊனமுற்றோருக்கு இலவச சைக்கிள், ஏழைப் பெண்களுக்கு இலவசத் திருமணம், பார்வையற்றோருக்கும், ஆதரவற்றோராய் வரும் முதியோருக்கும் உதவி...
வெட்டியான் ஹரியின் சேவைப் பணிகளில் சில, இவை.
தனது சமூக சேவைப் பணிகளாலேயே இப்பகுதியில் பிரபலமாகியிருக்கிறார், ஹரி. ஆனால் அவரின் கடந்த காலமோ வேதனைகளும் துயரங்களும் நிறைந்தது.
இவர் பிறந்தது இதே தத்தனேரிப் பகுதியில்தான். சிறுவயதிலேயே பெற்றோரை இழந்துவிட்டார். பெரியம்மாவின் தயவில் வளர்ந்தார். அரசு விடுதியில் தங்கி பள்ளிப் படிப்பை முடித்தார்.
ஆனால் மேல்படிப்புப் படிக்க பண வசதி இல்லை; ஆதரவு இல்லை; வேலையும் இல்லை. ஒரு வேளை சாப்பாட்டுக்கே திண்டாட்டம் என்ற நிலை. அப்போதுதான் 1970-ம் ஆண்டில் தத்தனேரி மயானத்தில் வெட்டியானாக வேலை பார்க்கத் தொடங்கினார் ஹரி.
ஆனால் வெட்டியான் வேலைக்கு கிடைத்தது, கிடைப்பது சொற்பக் கூலி. ஆயினும் அன்று முதல் இன்று வரை தன்னால் இயன்ற, சில சமயம் தனது சக்திக்கு மீறிய சமூக சேவைப் பணிகளை ஆற்றிவருகிறார் ஹரி.
அவரிடம் பேசினோம்...
""சிறுவயதில் வறுமையால் நான் பட்ட கஷ்டங்கள்தான் எனக்குப் பாடங்கள். நம்மாலியன்ற உதவிகளை பிறருக்குச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் ஆழப் பதிய அதுதான் காரணம். இத்தனை ஆண்டுகளில் எனக்கு ஏற்பட்ட நெகிழ்வும், அதிர்வுமான அனுபவங்கள் ஏராளம்.
ஒருமுறை மதுரை அருகேயுள்ள ஐராவதநல்லூரைச் சேர்ந்த ஒருவர் இறந்த பச்சிளம் குழந்தையை கையில் ஏந்தியவாறு இங்கு வந்து என்னிடம், இதை அடக்கம் செய்துவிடு என்றார்.
கூலி கேட்டபோது அவர் தனது கழுத்தில் கிடந்த துண்டை விலக்கி, தான் போட்டிருக்கும் ஐயப்ப மாலையைக் காட்டி அதன்மீது சத்தியமாகக் கூறுகிறேன்; பணம் இல்லை என சைகை செய்தார். அப்போதே அவர் கண்கள் தளும்பிவிட்டன.
எனக்கு ஒரு நிமிடம் கை, கால் ஓடவில்லை. உடனே அக்குழந்தையை நல்லடக்கம் செய்துவிட்டு, அவரது போக்குவரத்துச் செலவுக்கு பணம் கொடுத்தேன். ஆனால் அவர் வாங்க மறுத்துச் சென்றுவிட்டார்.
விபத்தொன்றில் காயமடைந்து, என்னைத் தேடிவந்த ஒரு முதியவரை நானே மயான மண்டபத்தில் தங்க வைத்துச் சிகிச்சை அளித்துக் குணமாக்கினேன். அவர் காலமானதும் நானே அடக்கமும் செய்தேன்.
இப்படி சொல்ல ஆரம்பித்தால் அது நீளும். ஆனால் என் நெஞ்சை நெருடும் விஷயம் இது- பத்து ஆண்டுகளுக்கு முன் பெரும்பாலும் வயோதிகர்களின் உடல்கள்தான் அடக்கம் செய்வதற்கு அதிகமாக வரும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக விபத்து, தற்கொலைன்னு சின்னப் பசங்களெல்லாம் பிணமா மயானத்துக்கு வருவதைப் பார்க்கும்போது என் நெஞ்சம் வேதனையில் வெடிக்கிறது...'' என்றவரிடம் அவரது திருமண வாழ்க்கை பற்றி கேட்டோம்.
""கலப்புத் திருமணம் சார்... 1980-ம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் திருமணம் செய்வதற்காக மணப்பெண்ணுடன் சென்றபோது பூஜைத் தட்டில் தாலிக் கயிறும், காணிக்கையும் வைத்து பட்டரிடம் நீட்டினேன். அதைப் பார்த்த பட்டர்களும் பக்தர்களும் கண்கலங்கிவிட்டனர். காரணம், வழக்கமாக மாங்கல்யம் தங்கத்தில் இருக்கும். ஆனால் நான் வைத்த தாலிக் கயிறில் இருந்தது, மஞ்சள் மட்டும்தான். அப்படிப்பட்ட வறுமை நிலை அப்போது.
தற்போது ஒரு பெண் குழந்தை, மனைவியுடன் மன நிறைவுடன் வாழ்ந்து வருகிறேன். வெட்டியான் வேலையில் கிடைக்கும் ஊதியத்தில் பெரும்பகுதியை உதவி செய்யவே செலவிடுகிறேன்.
வழக்கமான சேவைகளுடன், மதுரை அருள்தாஸ்புரம் மாநகராட்சி மருத்துவமனையில் மரக் கன்றுகள் நட்டுப் பராமரிக்கிறேன். ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றுத் தரும் பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டுள்ளேன்.
லட்சாதிபதியா இருக்கட்டும்... பிச்சாதிபதியா இருக்கட்டும்... "மேலே' போகும்போது எல்லாரும் ஆண்டிதானே? புதைக்கும்போது வெள்ளி அரணாக் கயிறைக் கூட அறுத்துட்டுப் போயிடற உலகம் இது. சொத்துத் தகராறால பிரேதத்துக்கு கொள்ளி வைக்காமப் போன சொந்தங்களையும் பார்த்திருக்கேன்... என்னத்த சார் பெருசா கட்டிட்டுப் போயிடப் போறோம்? கடைசி வரை என்னால முடிஞ்ச உதவிகளைச் செய்யணும். அதான் என்னோட ஆசை...'' -சிதையைச் சரிசெய்தபடி சாதாரணமாகச் சொல்கிறார் இந்தப் பிதாமகன்.

2 comments:

Big B from Tiruchengode said...

hi

Big B from Tiruchengode said...

Hi gayathri

It's nice to see this page about our home town, Keep on updating this site regularly


Cheers
Baalaji