Tuesday, October 10, 2006
தேவாரத் திருவுலா! திருச்செங்கோடு - பகுதி - 1
தமிழகத்தில் ஒரு விளையாட்டு மரபு உண்டு. ‘உங்கள் வீடு மதுரையா... சிதம்பரமா?’ என்று கேட்பார்கள். மதுரையில் மீனாட்சி ஆட்சி; சிதம்பரத்தில் சிவன் ஆட்சி. எனவே, பெண்ணின் கரம் ஓங்கியதா? ஆணின் கரம் வலுத்ததா என்று தெரிந்து கொள்வதற்காக இப்படிக் கேட்பதுண்டு. இந்த மரபை வைத்து, ராஜாஜி ஒரு முறை சொன்னார்: ‘எல்லா வீடும் திருச்செங்கோடாக இருந்தால் நன்றாக இருக்கும்!’
ஆணொரு பாதியும், பெண்ணொரு பாதியுமாக அகிலத்தின் ஆதார உண்மையை வெளிப்படுத்தும் வடிவம் கொண்டு ஆண்டவன் இலங்கும் இடம் திருச்செங்கோடு. ஆமாம், பாகம் பிரியாளாக பிராட்டியம்மையும், மாதொரு பாதியனாக ஐயனும் காட்சி தரும் அற்புதத் திருத்தலம்தான் இது! ஆணும் பெண்ணும் சமமென்பதையும், ஒருவருக்கொருவர் உதவிகரமானவர்கள் என்பதையும் காட்டுகிற கொடிமாடச் செங்குன்றூர் (இதுதான், திருச்செங்கோட்டின் பழங்கால இலக்கியப் பெயர்) திருக்கோலம் காணப் புறப்படுவோம், வாருங்கள்!
வாயுவுக்கும் ஆதிசேஷனுக்கும் வழக்கம்போல போட்டி; யார் உயர்ந்தவர் என்று தகராறு. ஆதிசேஷன் மேரு மலையைச் சுற்றிப் பிடித்துக் கொள்ள, வாயு தனது வேகமெல்லாம் கொண்டு வீசித் தள்ள... மலையின் சிகரங்கள் உடைத்துக் கொண்டு பறந்தன (இந்தக் கதை ஏற்கெனவே தெரியும்தான்)! ஆதிசேஷன் என்ன ஆனான்? வாயுவின் வேகத்தில் ஆதிசேஷன் ஒரேயடியாகப் புரண்டு தென்திசையில் பறந்துபோய் வீழ்ந்தான். அவன் உடம்பெல்லாம் ரத்தம். ரத்தத்தோடு வீழ்ந்த ஆதிசேஷனே, மலை ஆனான். ரத்தக் கறை படிந்த மலை & எனவே, செம்மலையாகத் தெரி கிறது. செங்கோடு என்னும் பெயர் (கோடு&மலை) வருவதற்கான காரணம் இதுவேயாகும்.
காமதேனு சிவனை வழிபட்டு, ஐந்து மலைகளைப் பெற்றாள். ஐந்துள் ஒன்று இந்த மலை என்றும் ஒரு புராணக் கதை வழங்குகிறது.
திருச்செங்கோடு நகரத்துக்கே அழகைத் தந்து கொண்டு ஓங்கி நிற்கிறது மலை. சிவப்பு வண்ணக் கற்கள். தள்ளி இருந்து பார்க்கும்போது, மலையே, பாம்பு வடிவில் காட்சி அளிக்கிறது. நாககிரி, நாகாசலம் எனும் பெயர்களும் இதற்கு உண்டு. ‘நாகாசல வேலவா!’ என்றே இங்குள்ள முருகப் பெருமானை அருணகிரிநாதர் பாடுகிறார்.
பிரதானமாகச் சிவப்புப் பாறைகள் இருந்தாலும், ஆங்காங்கே மஞ்சள் கலந்தது போலவும் தெரிகிறது. மலையே, ஆண் அம்சமும் (சிவப்பு) பெண் அம்சமும் (மஞ்சள்) நிறைந்ததாகக் கருதப்படுகிறது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,900 அடி உயரமுள்ள மலை. மலையடிவாரத்தில், ஊருக்குப் பிரதானமாக ஒரு கோயில் உள்ளது. அருள்மிகு பரிமளவல்லி உடனாய அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில். கயிலாச நாதருக்கு ‘நிலத் தம்பிரான்’ என்றும், மலை மீதுள்ள அர்த்தநாரீஸ்வரருக்கு ‘மலைத் தம்பிரான்’ என்றும் திருநாமங்கள் உண்டு.
1,200 படிகள் ஏறி மலைக் கோயிலுக்குச் செல்லலாம். தேவஸ்தானப் பேருந்துகள் மலைப்பாதையில் கோயில் வரை செல்கின்றன. தனியார் கார்கள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றுக்கும் மேலே போக அனுமதி உண்டு. மலைக் கோயிலில் மாலை 6 மணிக்கு நடை மூடி விடுவார்கள். வாகனங்கள் மலையேற, மாலை 5.30 வரை மட்டுமே அனுமதி.
படிகளேறிப் போகும்போது, வழியில் இளைப்பாறுவதற்கு மண்டபங்கள் உள்ளன. தைலி மண்டபம் இவற்றுள் ஒன்று. இதற்கு அருகில், நந்தி ஒன்று இருக்கிறது. இந்த நந்திமீது பக்தர்கள் பலர் வெண்ணெய் பூசுகிறார்கள். சற்றுத் தள்ளி, கிட்டத்தட்ட 60 அடி நீளமுள்ள ஐந்து தலை நாகத்தின் உருவம்.
படிகளேறிப் போகும் பாதை வளைந்து வளைந்து (பாம்பு போலவே) செல்கிறது. வாகனப்பாதை மலையைச் சுற்றிக் கொண்டு, எதிர்ப்பக்கமாகச் செல்கிறது. நடந்து செல்லும் பாதை& மலையுச்சியில் ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜ கோபுரத்தில் கொண்டு விடுகிறது. இதுவே, கோயிலின் வடக்கு கோபுரம். வாகனப் பாதையில் வந்தால், கோயிலின் மேற்கு கோபுரத்தை அடைந்து விடலாம்.
இந்தத் தலத்துக்குத் திருஞானசம்பந்தப் பெருமான் பாடியுள்ள தேவாரப் பாடல்களைப் பாடிக் கொண்டே நடந்துதான் போவோமே!.
வெந்த வெண்ணீறு அணிந்து விரிநூல் திகழ்மார்பில் நல்ல
பந்தணயும் விரலாள் ஒரு பாகம் அமர்ந்தருளிக்
கொந்தணவும் பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
அந்தணனைத் தொழுவார் அவலம் அறுப்பவரே!
என்று பாடினார் சம்பந்தர். படிகளில், ஆங்காங்கே நாக உருவங்கள். வழியில் பல தீர்த்தங்கள். (இந்தத் தலத்துக்கு மொத்தம் 16 தீர்த்தங்கள் உள்ளதாகப் பழைய குறிப்புகளில் காணப்படுகிறது). இந்தப் படிகளில் 60&ஆம் படிக்குப் பெரிய முக்கியத்துவம் உண்டு. ஒரு காலத்தில், இந்தப் பிரதேசத்தில், 60&ஆம் படியில் நின்று சத்தியம் செய்தால், அது நீதிமன்றத்தில்கூட ஏற்றுக் கொள்ளப்பட்டதாம்.
வடக்கு ராஜ கோபுரத்தை அடைந்து விட்டோம். உயரமாக, அழகாக, நிறைய சுதைச் சிற்பங்களோடு இருக்கிற கோபுரம். உள்புகுந்தால், கோயில்புறத்தில், 20 படிகள் கீழிறங்க வேண்டும்.
கீழிறங்கினால்& இப்போது நாம் நிற்பது கோயிலின் பிராகாரம். வெளிப்பிராகாரம் என்று சொல்லலாம். இந்தப் பிராகாரத்திலிருந்துதான் சந்நிதிகளுக்கும் சந்நிதி முன்மண்டபங்களுக்கும் செல்ல வேண்டும். மற்ற கோயில்களில், வெளிப் பிராகாரம் என்றால், நாம் வலம் வரும்போது, நமக்கு வலப்புறம், உள்மதில் இருக்குமல்லவா! இங்கு அப்படி இருக்காது.
பிராகார வலத்தைத் தொடங்குவோமா! நாம் இருப்பது வடக்குத் திருச்சுற்று. முதலில், பெரிய ஆதிசேஷன் உருவம். ஐந்து தலைகளுடன் படமெடுத்து நிற்கிறது. அடுத்தது சங்கமேஸ்வரர் சந்நிதி (மேற்குப் பார்த்த மாதிரி). சங்கமேஸ்வரருக்கு வலப் பக்கம், தெற்குப் பார்த்த மாதிரி வேதநாயகி அம்மன். அடுத்து, தெற்கு நோக்கிய காலபைரவர். கொள்ளை அழகாக இருக்கிறார். நான்கு கரங்களும், மந்தகாசப் புன்னகையுமாக வாகனத்தோடு இருக்கும் நின்ற திருக்கோல பைரவர்.
கிழக்குச் சுற்றில் திரும்புகிறோம். மலையல்லவா! பிராகாரம் சமதளமாக இல்லாமல் அப்படியே ஏறுகிறது. கிழக்கு வாயிலைக் கடந்து, வலம் தொடர்ந்து, தெற்குச் சுற்றில் திரும்புகிறோம். இந்தச் சுற்றில் பிராகாரம் சரிவாக இறங்குகிறது. சில இடங்களில் பிராகாரம் உயரத்தில் இருக்க, நடுவில் கோயில் மண்டபமும் சந்நிதிகளும் சற்றே பள்ளத்தில் இருப்பதுபோலத் தோற்றம் தருகின்றன. மலையுச்சிக்கு வந்து, கல்லெடுத்துச் சமன் செய்து, செதுக்கி, அற்புதமான சிற்பங்களோடு கோயில் அமைத்திருக்கும் நம் மூதாதையர்களின் பக்தியையும் திறமையையும் ஈடுபாட்டையும் வியக்காமல் இருக்க முடியவில்லை.
தெற்குச் சுற்றில் சப்தமாதர்கள். அடுத்து வரிசையாக அறுபத்துமூவர். தென்மேற்கு மூலையில் நிருதி விநாயகர். மேற்குத் திருச்சுற்றில் குன்றீசர்& பர்வதவர்த்தினி உடனாய ராமநாதஸ்வாமி. பஞ்சலிங்கங்கள்.
இப்படியே, மேற்கு கோபுரத்தை அடைந்து விடுகிறோம். வாகனத்தில் வந்தால், உள்ளே வரும் வாயில் இதுதான். மூன்று நிலை கோபுரம். தொடர்ந்து வலம் வருகிறோம். வடக்குச் சுற்றில் திரும்பியவுடன் நாச்சாரம்மன். அடுத்து ஜேஷ்டாதேவி. மண்டபத்தின் பக்கமாக செல்வ விநாயகர்.
இந்தச் சுற்றில், ஒரு தனிச் சந்நிதியில் மல்லிகார்ச் சுனர். இன்னொரு கிழக்குப் பார்த்த தனிச் சந்நிதி யில், சஹஸ்ர லிங்கம். சற்றே தள்ளி, பெரிய இலுப்பை மரம். இதுவே, தல மரம். அருகில், காசி விசாலாட்சி. அடுத்திருப்பது, தெற்கு நோக்கிய நடராஜர் சந்நிதி.
நடராஜர் சந்நிதியின் அருகில்தான், நாம் உள்ளே நுழைந்த வடக்கு கோபுர வாயில்.
இந்தக் கோயிலின் அமைப்பு சற்றே வித்தியாசமாக உள்ளது.
மேற்கு கோபுரத்தின் வழியாக உள்ளே வந்து, பிராகாரத்தைக் கடந்தால், பெரிய மண்டபம் ஒன்றை அடைந்து விடுவோம். இந்த மண்டபத்தில்தான் அர்த்தநாரீஸ்வரர் பலிபீடம், கொடிமரம், நந்தி ஆகியவை உள்ளன. மேற்கு கோபுர வாயிலுக்கு நேராக உள்ள இவற்றுக்கு அப்புறமாக, ஒரு நாலு கால் மண்டபம். அதே நேர்க்கோட்டில், கல்சுவர் ஒன்று. அதில் சாளரம். சாளரம் வழியாகப் பார்த்தால், உள்ளே இருக்கும் மூலவர் தெரிவார்.
மண்டபத்தின் அழகுக்கு வார்த்தைகள் போதா. எத்தனை எத்தனை தூண்கள்; ஒவ்வொரு தூணிலும் எத்தனை எத்தனை சிற்பங்கள், என்னென்ன கலைநுட்பங்கள். ‘கல்லும் கவிதை சொல்லும்’ என்பார்களே & இங்கே, காவியமே பாடிக் கொண் டிருக்கின்றன. புலியோடு சண்டை போடும் வீரன்; யாழிசைக்கும் பெண்; மேலே வரிசையாக பூத கணங்கள்... சிற்ப அழகு மட்டுமில்லை; வெறுமே ஒரு வளைவோ, திருப்பமோ இருந்தால்கூட, அதன் நுட்பமும் துல்லியமும் அசர வைக்கின்றன.
இந்த மண்டபத்தின் தெற்குப் பகுதியில் கிழக்குப் பார்த்ததாக ஒரு சந்நிதி. அருள்மிகு நாகேஸ்வரர்; சிவலிங்கத் திருமேனி. அவருக்கு எதிரில் நந்தி.
இந்த மண்டபத்திலிருந்து, வடக்குத் திருச்சுற்றை அடைந்து, அங்கிருந்துதான் மூலவர் சந்நிதிக்குச் செல்ல வேண்டும். சொல்லப் போனால், இந்த முன் மண்டபத்துக்கு நேர் பின்னால்தான், செங்கோட்டுவேலர் சந்நிதியும், அர்த்தநாரீஸ்வரர் சந்நிதியும் (சாளரம் வழியாக இவரைப் பார்க்கலாம்) உள்ளன. இருப்பினும், பிராகாரத்துக்குச் சென்று, அங்கிருந்து பக்கவாட்டு வழியாகத்தான் செல்ல வேண்டும்.
வடக்குத் திருச்சுற்றில் முதலில் பார்த்தோமே, பெரிய ஆதிசேஷன் வடிவம் & அதற்கு எதிரில் நுழைகிறோம். இங்கும் ஒரு மண்டபத்தை அடை கிறோம். முன் மண்டபத்தை விட அளவில் சிறியது என்றாலும், அழகில் அதற்கு ஈடானது. இங்கும் நிறைய தூண்கள். தூணெல்லாம் பொங்கி வழியும் சிற்பங்கள். ஒரு தூணிலிருந்து வீரபத்திரர் அருளுகிறார். குறி சொல்லும் பெண், மேளம் அடிக்கும் கட்டியக்காரன், யாழினி, அர்ஜுனன் தவக்கோலம், நாட்டியப் பெண் என்று எங்கு திரும்பினாலும் அழகு. சில தூண்களை, கீழே நான்கு சிம்மங்கள் தாங்கிக் கொண்டிருக்கின்றன. வேளாள கவுண்டர் மண்டபம் என்றழைக்கப்படும் இந்த மண்டபம், கிருஷ்ண தேவராயரால் கட்டப் பெற்றதாகும். ஒரு தூணில், ராயரும் இருக்கிறார்.
இந்த மண்டபத்தில்தான், முருகருக்கான கொடிமரம் உள்ளது. அதற்கு முன்பாக, மயில். முருகன் சந்நிதிக்குச் செல்லும் வாயிலில், அழகான இரண்டு துவாரபாலகர்கள். துவாரபாலகர்கள் அழகானவர்கள் மட்டுமில்லை. உள்ளூர்க்காரர் ஒரு சூட்சுமத்தைக் காட்டினார். துவார பாலகர் அணிந்திருக்கும் மாலைக்கும், அவருடைய மார்புக்கும் இடையில் இந்தப் பக்கம் ஒரு ஊசியை நுழைத்து அந்தப் பக்கம் வாங்கி விடலாம். சிற்பக் கலையில் இப்படியரு நுட்பமா! மண்டபத்திலிருந்து, அருள்மிகு செங்கோட்டுவேலர் சந்நிதியை அடைகிறோம்.
--- தொடரும் ---
--- சக்தி விகடன் ---
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
பக்தி மனதில் தமிழும் மணக்கிறது,பரவசமூட்டும் பதிவுகள்
http://picasaweb.google.com/lh/emailAlbum?uname=m.prakasham&aid=5218549676198998385&continue=http%3A%2F%2Fpicasaweb.google.com%2Fm.prakasham%2FGods%23
தங்கரத வெள்ளோட்ட படங்கள்
மலைக்கோயில் டிசம்பர் 1 முதல் இரவு 8 மணி வரை திறந்து வைக்கப்ப்பட்டுள்ளது. மலைப்பாதையில் வாகனங்கள் இரவு 7.15 மணி வரி அனுமதிக்கப்படும்.
Post a Comment