Tuesday, October 10, 2006
தேவாரத் திருவுலா! திருச்செங்கோடு பகுதி - 2
வேளாள கவுண்டர் மண்டபம் என்கிற மண்ட பத்தில் இருந்து செங்கோட்டுவேலர் சந் நிதியை அடைகிறோம்.
நின்ற திருக்கோலம்; கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். வலது திருக்கரத்தில் வேல். இடுப்பில் ஊன்றிய இரு கரம். அதன்மீது சாய்ந்திருக்கும் சேவல் கொடி. தலையில் ஜடாமுடி. நெற்றியில் சிறு பள்ளம். அதில் அப்பியுள்ள சந்தனம். வாய் கொள்ளாப் புன்சிரிப்புடன் தரிசனம் கொடுக்கிறார் செங்கோட்டுவேலர்.
செங்கோட்டுவேலரை தரிசித்த அருணகிரிநாதருக்கு ஒரே ஆதங்கம். படைத்ததுதான் படைத்தார் பிரம்மா... வெறும் இரண்டு கண்களோடு படைத்து விட்டாரே... நாலாயிரம் கண்க ளாவது கொடுத்திருக்கக் கூடாதா? எதற்குத் தெரியுமா? செங்கோட்டுவேலரைச் சிறிதா வது பார்த்திருக்கலாமே!
மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு
மேலான தேவனை மெய்ஞ் ஞான தெய்வத்தை மேதினியில்
சேலார் வயல் பொழில் செங்கோடனைச் சென்று கண்டுதொழ
நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே!
அருணகிரிநாதரின் ஆதங்கத்தின் நியாயம், அருள்மிகு செங்கோட்டுவேலரை தரிசிக்கும்போது புரிகிறது. வெள்ளை பாஷாணத்தால் ஆன திருமேனி. சுயம்பு என்பதாக ஐதீகம். அடியில் சதுர பீடம்.
மூலவருக்கு அருகில் சஷ்டிகணபதி. மூலவரை அப்பிரதட்சிணமாகச் சுற்றுகிறாற்போல, அம்புக் குறியிட்டு ஓர் அறிவிப்பு. அர்த்தநாரீஸ்வரரை தரிசிக் கச் செல்லும் வழி. அந்த வழியே செல்கிறோம். செங் கோட்டுவேலர் சந்நிதியை அப்பிரதட்சிணமாகச் சுற்றிச் சென்று, அருகிலுள்ள அர்த்தநாரீஸ்வரர் சந்நிதி முன் நிற்கிறோம். வெளியிலிருந்து பார்த்த சாளரத்துக்கு முன்புறம் வந்து விட்டோம்.
செங்கோட்டுவேலர் சந்நிதியும் அர்த்தநாரீஸ்வரர் சந்நிதியும் அருகருகே அமைந்தவை. பிள்ளை கிழக்குப் பார்த்தவர்; அப்பா, மேற்குப் பார்த்தவர். இரண்டு சந்நிதிகளுக்கும் இடையில் செல்லாமல், பிள்ளையின் சந்நிதியை இடம் செய்து பின்புறம் அடைந்து, அப்படியே தொடர்ந்து இரண்டு சந்நிதிகளுக்கும் இடைப்பட்ட இடத்தை அடையும்போது, அம்மை யப்ப சந்நிதியின் திருமுன்னர் அடைந்து விடுகிறோம். கட்டை கட்டி இருக்கிறது. தோலும் துகிலும் குழையும் தோடும் ஒரு சேரக் கொண்ட அந்த ஒளிர்கோலத்தை இன்னும் அருகே தரிசிக்க வேண்டாமா!
திரும்பி, செங்கோட்டுவேலர் சந்நிதிக்கு வருகிறோம். வள்ளி& தெய்வானையுடன் கூடிய உற்சவ முருகரும் இருக்கிறார். சந்நிதி விட்டு வெளியே வந்து நிற்கிறோம். மண்டபக் கூரையி லுள்ள சிற்ப அதிசயங்கள் கண் களைக் கவர்கின்றன. மேலே இருந்து தொங்கும் சங்கிலிகள். மேலே இருந்து தொங்கும் தாமரைப்பூ. அதன் இதழ்க ளில் அமர்ந்து, மகரந்தத்தை ருசிக்கும் எட்டுக் கிளிகள். கிளிகளுக்குக் காவ லாக, வெளியில் நான்கு பாம்புகள்.
ஆஹா! தாமரையும் கிளியும்...எல்லாம் கல் சிற்பம்.
மண்டபத்திலிருந்து அர்த்தநாரீஸ் வரர் சந்நிதிக்குச் செல்வதற்கு வழியுள் ளது. இன்னொரு சிறிய மண்டபத்துள் நுழைந்து, அதற்குப் பக்கவாட்டிலுள்ள மண்டபத்துள் நுழைகிறோம், இதுவே, அர்த்தநாரீஸ்வரர் சந்நிதியின் முன் மண்டபம். இங்குதான், செங்கோட்டு வேலர் சந்நிதி வழியாக வந்தால், கட்டைக்கு அப்புறம் வந்து சேர்வோம். அர்த்த மண்டபம் தாண்டி அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர். ஒரு பக்கம் வேஷ்டியும் இன்னொரு பக்கம் புடவையுமாகத்தான் சுவாமிக்கு அலங்காரம். வெள்ளை பாஷாணத்தால் ஆன திருவுருவம். சுமார் ஐந்தடி உயரம். சுயம்பு என்று சொல் கிறார்கள். சித்தர்கள் உருவாக்கியது என்றும் சிலர் சொல்வர்.
எப்படியாயினும், விவரித்துச் சொன்னால் சொற்களுக்கு அடங்காத எழில் கொண்ட அதிசயத் திருமேனி. இடப்பாகத்தில் அம்மை. வலப் பாகத்தில் அப்பன். அம்மையின் பக்கம் பின்னல்; லேசான ஒயில்; அப்பனின் பக்கம் ஜடாமுடி; கையில் தண்டாயுதம். அம்மையின் திருவடியில் சிலம்பு. அப்பன் திருவடியில் கழல். மூலவர் திருமேனிக்குக் கீழே நீர் சுரந்து கொண்டே இருக்கிறது. இதையே தீர்த்தப் பிர சாதமாக எல்லோருக்கும் தருகிறார்கள்.
காணக் காணத் தெவிட்டாத ஆனந்தம் தரும் அம்மையப்பத் திருக்கோலம் கண்டு தரிசிக்கிறோம். எல்லா இடத்திலும் நிறைந்து, எல்லாப் பொருளிலும் கலந்து, எங்கும் நீக்கமற நிறைந்த பரம்பொருளுக்குத் தனி உருவம் கிடையாது. அருவமான அந்த ஆண்ட வன், மனிதக் கண்ணுக்கும் கற்பனைக்கும் எட்ட வேண்டியே உருவம் தாங்குகிறான். உருவம், உருவமா வதற்கு முன்னர், அருவுருவமாகும். அதாவது, உருவம் இருக்கும், ஆனால், அருவமாக (உருவமில்லாத தன்மை போல) இருப்பதுபோலத் தோன்றும். சிவ லிங்கம் என்பது அருவமும், உருவமும் கலந்த அருவுருவத் திருமேனியாகும். அதற்கு, அடுத்த நிலையில் உருவம் தாங்கிவரும்போது, அம்மையும் அப்பனும் கலந்த நிலையில் (ஆணும் பெண்ணும் என்பதைக் காட்டுவதற்காக) உருவம் தாங்குவது மிகுந்த சிறப்புக்குரியது.
சிவபெருமானின் 64 உருவத் திருமேனிகளில் தலை யானதாகக் கருதப்படுவது அர்த்தநாரீஸ்வர மூர்த்தியே ஆகும். தமிழகத்தைப் பொறுத்தவரை, கி.பி. 3 மற்றும் 4&ஆம் நூற்றாண்டுகளில் மிகப் பரவலாக அம்மையப்ப வழிபாடே இருந்ததாகத் தெரிகிறது. அம்மையப்பத் திருக்கோலத்தை காரைக்கால் அம்மையாரும், மாணிக்க வாசகரும் நிறையப் பாடியுள்ளனர். அழகு கொஞ்சும் அருள் திருமேனியாம் அம்மையப்ப வடிவத்தை தரிசிக்கிறோம். முன் மண்டபத்திலுள்ள உற்சவ அம்மையப்பத் திருமேனியில், அர்த்தநாரீஸ்வர வடிவத்தின் எழிலை முழுமையாகக் காணலாம். இடப் பாதியில் பெண்மையின் நளினமும், வலப் பாதியில் ஆண்மையின் கம்பீரமும் இழையோடுகின்றன. கண்க ளில்கூட, வலக் கண்ணுக்கும் இடக் கண்ணுக்கும் துல்லி யமான வித்தியாசம் தெரிகிறது.
எல்லையற்ற பரம்பொருளுக்கு இரண்டு தன்மைகள் உண்டு. நிலைத்தன்மை கொண்ட நிவ்ருத்தி, வேகம் நிறைந்த பிரவ்ருத்தி & ஆகிய இந்த இரண்டு தன்மை களின் கூட்டிணைப்பே, பிரபஞ்சத்தில் உள்ள பொருள்களாகவும் ஜீவன்களாகவும் பரிமளிக்கின்றன. நிவ்ருத்தியைச் சிவனாகவும் பிரவ்ருத்தியைச் சக்தியா கவும் வணங்குவது மரபு. ஒவ்வொரு ஜீவனிலும் (மனிதரிலும்) இந்த இரண்டு தன்மைகளும் உண்டு. இரண்டும் முரண்பாடின்றி இணையும்போது எல்லை யற்ற ஆனந்தம் உண்டாகும்.
தீபாவளியை ஒட்டி வரக் கூடிய கேதாரகௌரி விரதத்துக்கும் அர்த்தநாரீஸ்வரருக்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஆச்வயுச பகுள (அதாவது, ஐப்பசி மாத கிருஷ்ணபட்சம்& தேய்பிறை) சதுர்த்தசியில், பார்வதி தேவியை எண்ணி நோன்பிருந்தால், நல்ல கணவனையும் (திருமணமாகி இருந்தால், கணவனின் அன்பையும் குறையற்ற இல்லறத்தையும்) செல்வங்களையும் பெறலாம் என்பதற்காகத் தொடங்கியதே கேதார கௌரி விரதமாகும். முதன் முதலாக இந்த விரதத்தைத் தொடங்கியது யார் தெரியுமா? சாட்சாத் பார்வதிதேவிதான். இவ்வாறு அம்பாள் வழிபட்டதால் தோன்றியதுதான் அர்த்தநாரீஸ்வரத் திருமேனி என்றொரு புராணக் கதை உண்டு. அதென்ன சேதி?
சிவனும் பார்வதியும் அருகருகே வீற்றிருந்தார்கள். சிவனை வழிபடுவதற்காக பிருங்கி முனிவர் வந்தார். சிவனை மட்டும் வழிபட என்ன வழி என்று யோசித்தார். அம்மையை நகர்ந்து போகச் சொல்ல முடியவில்லை. வண்டு உருவம் கொண்டார். அம்மைக்கும் ஐயனுக்கும் நடுவில் புகுந்து புறப்பட்டு, சிவனை மட்டும் வலம் வந்தார். மனம் வருந்திய அம்மை, இறைவனிடம் இறைஞ்சினார். சிவனையும் பார்வதியையும் பிரிக்க முடியாது என்பதை உலகுக் கும் பிருங்கிக்கும் உணர்த்த விரும்பிய சிவனார், அம்மையிடம் வழி சொல்லிக் கொடுக்க, அதன்படியே அம்மையும் புரட்டாசி மாத வளர்பிறை தசமியில் தொடங்கி ஐப்பசி கிருஷ்ண பட்ச சதுர்த்தசி நாள் வரை மரகதலிங்கத்தைக் கேதார கௌரி என்னும் திருநாமத்துடன் வழிபட, நோன்பின் விளைவாக, அப்பனிடமிருந்து பிரிக்கப்பட முடியாத வகையில், அப்பனின் வாமபாகத்தைப் பெற்று பாகம்பிரியாள் என்று பெயர் பெற்றார் என்பது வரலாறு (ஆதி கேசவப் பெருமாள்தான், பார்வதிக்கு இந்த நோன் பைப் பற்றிச் சொல்லிக் கொடுத்தவர் என்றும் சொல்கிறார்கள்). அர்த்தநாரீஸ்வர மூலவருக்கு முன் னால் மரகதலிங்கம் உள்ளது; தவசீலரான பிருங்கி மகரிஷியின் உருவமும் உள்ளது.
‘‘அம்மையே அப்பா! ஒப்பிலா மணியே!’’ என்று வணங்கிக் கொண்டே வெளியே வருகிறோம். வண் டாகப் பிறந்தாலும், அர்த்தநாரீஸ்வரரின் மலர் மாலையோடு ஐக்கியப்படும் வண்டாக வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டே வெளியே வருகி றோம். பக்கவாட்டு மண்டபம் ஒன்றின் வழியாக உள்ளே வந்தோமே, அந்த மண்டபத்துக்குள் மீண்டும் வருகிறோம். அங்கே நாரி கணபதி காட்சி தருகிறார். அருகில் வடக்குப் பார்த்தபடி துர்க்கை.
திரும்பினால், கேதார கௌரி அம்மன். அருகிலேயே தட்சிணாமூர்த்தி. வணங்கி வழிபட்டு, மீண்டும் வெளி மண்டபத்தை அடைகிறோம். இப்படியே வலமாகச் சென்றால், நாம் ஏற்கெனவே பார்த்தோமே, கல்லெல் லாம் காவியம் பாடும் மண்டபம்... அதற்கு அருகில் வந்து விடுகிறோம்.
பிராகாரத்தின் தெற்குச் சுற்றும், இந்த மண்டபத்தின் தெற்குப் பகுதியும் சந்திக்கும் இடத்தில் மூன்று தனித் தனிச் சந்நிதிகள். சொல்லப் போனால், நான்கு சந்நி திகள். வடக்குப் பார்த்ததாக இருப்பதில், சைவ நால் வர். மீதம் மூன்று கிழக்கு பார்த்த சந்நிதிகள். ஒரு சந்நிதியில், ஸ்ரீதேவி& பூதேவி சமேத ஆதிகேசவப் பெருமாள். எதிரில் துவஜ ஸ்தம்பமும், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், கருடாழ்வார் ஆகிய மூவரும் இருக்க, ஜோராக சேவை சாதிக்கும் பெருமாள். மற்றொரு சந்நிதியில் நாகேஸ்வரர், எதிரில் நந்தியுடன், சிவலிங்க ஸ்வரூபமாகக் காட்சி தருகிறார் (இவரைப் பார்த்து விட்டுத்தான் நாம் அந்தப் பக்கம் போனோம்). அடுத் தொரு சந்நிதியில், நல்லீசர். இவரும் சிவலிங்கத் திரு மேனி கொண்டவர்.
பெருமாளையும் சிவனையும் வணங்கி மண்டபம் அடைகிறோம். மண்டபத் தூண்களின் அழகு கண்க ளைக் கட்டியிழுக்கிறது. அர்த்தநாரீஸ்வர அழகு மனதைச் சுண்டுகிறது. ஆனந்த தரிசனம் முடித்த திருப்தியில், உள்ளம் பூரிக்க திரும்புகிறோம்.
திருத்தலச் சிறப்புகள்!
திருச்செங்கோடு திருத்தலத்தின் மகிமைகள் ஏராளம்! அவற்றுள் சிலவற்றைப் பார்ப்போம்.
சிலப்பதிகாரத்தில் முருகன் வழிபாடு நடைபெற்ற இடங்களில் ஒன்றாக திருச்செங்கோடு குறிப்பிடப் படுகிறது.
முத்துசாமி தீட்சிதர், இந்தத் தலத்தைத் தன்னுடைய அர்த்தநாரீஸ்வரர் குமுதக்ரியாவில் பாடுகிறார்.
அறுபத்துமூவருள் ஒருவரான விறன்மிண்டரின் அவதாரத் தலம்.
பாததூளியார் என்ற பெயரில் அடியார் ஒருவர் இருந்தார். நெடுநாட்கள் பிள்ளையின்றித் தவித்த அவரும், அவர் மனைவியாரும் செங்கோட்டுவேலருக்கு வேண்டிக் கொள்ள, ஆண் குழந்தை பிறந்தது. உமைபாகன் என்று பெயர் சூட்டினர். ஆனால், குழந்தை வாய் பேசாதிருக்க, குழந்தையைக் கொண்டு வந்து செங்கோட்டுவேலரின் தேர்க் காலில் இட்டாராம் பாததூளியார். தேர் உருண்டோ டத் துவங்க, சட்டென்று விழித்துத் தப்பித்த குழந்தை எழுந்து பேசத் தொடங்கினானாம்.
சிவப்பிரகாசர் என்னும் மகான் இங்கு வந்தபோது, கல் நந்திக்கு நிலக்கடலை கொடுத்துச் சாப்பிட வைத்த தாக ஒரு தகவல் நிலவுகிறது.
மலையுச்சியில் உள்ள குமார தீர்த்தம் மிகவும் விசேஷமானது. மலையின் கிழக்குப் பகுதியில், மலடிக் கல் என்று ஒன்றுள்ளது. இதனை வலம் வந்தால், குழந் தைப் பேறு கிட்டும்.
பல அற்புதங்கள் இங்கு நடைபெற்றுள்ளன. கொங்கு நாட்டுப்பகுதிக்கு வந்த ஞானசம்பந்தர், முதலில் இங்கு வழிபட்டு, பின்னர்தான் பிற தலங்களுக்குச் சென்றார். மீண்டும் இங்கு வந்தபோது, தன்னுடைய பரிவாரங்களையும் பிறரையும் நளிர்சுரம் (குளிர்சுரம்) தாக்கி இருப்பதைக் கண்டார். இறையனாரை வணங்கி, ‘அவ்வினைக்கு இவ்வினை’ என்று தொடங்கி, ‘தீவினை வந்து எம்மைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்’ என்று ஆணையிட்டுப் பாடினார். அடியார்களைப் பற்றியிருந்த நளிர்சுரம், அவர்களிடமிருந்து மட்டுமல்லாமல், இந்தப் பகுதியை விட்டே ஓடி விட்டது. இந்தப் பதிகம் ‘திரு நீலகண்டப் பதிகம்’ எனப்படுகிறது. திருஞான சம்பந்தர் அருளிய திருநீலகண்டப் பதிகத்தின் முதல் பாடல்:
‘அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லும் அஃதறிவீர்
உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக்கு ஊனமன்றே
கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறா திருநீலகண்டம்
இந்தப் பதிகத்தை பாடினால், நோய்கள் அண்டாது.
--- சக்தி விகடன் ---
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment